search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள் ஒப்பந்தம்"

    டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாராவை ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தத்தில் சேர்க்காததால் சர்ச்சை எழுந்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணி வீரர்களுக்காக ‘ஏ’ பிளஸ், ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய பிரிவுகளில் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும். இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கும் ‘ஏ’ பிளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 3 சதங்களுடன் 521 ரன் குவித்தார்.

    இதனால் புஜாரா கிரிக்கெட் வாரிய ஊதிய ஒப்பந்தத்தில் ‘ஏ’ பிளஸ் பிரிவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘ஏ’ பிரிவில்தான் (ரூ.5 கோடி) இடம் பெற்றுள்ளார். அவருக்கு ‘ஏ’ பிளஸ் பிரிவு தரம் உயர்வு அளிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறும்போது, ‘‘புஜாராவுக்கு ரூ.7 கோடி சம்பளம் கிடைக்கும். ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தம் வழங்கப்படாதது வேதனை தருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தராத வகையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு செயல்பாடு உள்ளது’’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதுபற்றி கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் “டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர்களுக்கு மட்டுமே ‘ஏ’ பிளஸ் ஒப்பந்தம் போடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் தேவையற்றது. ஏற்கனவே அணி நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது’’ என்று பதில் வருகிறது.

    என்றாலும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் புஜாராவிற்கு ஏ பிளஸ் பிரிவு கொடுக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    ×